Tuesday, 18 January 2011

மொபைல் போன் பயனாளர்களுக்கு நாளை முதல் Mobile Number Portability


வேறொரு செல்போன் நிறுவனத்தின் சேவைக்கு மாறினாலும் அதே செல்போன் எண்ணை வைத்துக் கொள்ளும் வசதி நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான அறிவிப்பை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டது.
 
நாடு முழுவதும் உள்ள செல்போன் வாடிக்கையாளர்கள், தங்களுடைய செல்போன் நிறுவன சேவை செயல்பாடுகளில் அதிருப்தி ஏற்பட்டால் வேறு செல்போன் நிறுவன சேவைக்கு மாறுகின்றனர். அப்படி மாறினால் அவர்களுடைய செல்போன் எண்களையும் மாற்ற வேண்டியது இருக்கிறது. அதனால், சேவை குறைபாட்டை சகித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
 
இந்த நிலையில், வேறு செல்போன் நிறுவனத்துக்கு மாறினாலும் அதே செல்போன் எண்ணை தொடர்ந்து வைத்துக் கொள்ளும் வசதியை அறிமுகம் செய்வதாக தொலைத்தொடர்பு துறை அறிவித்தது. நீண்ட நாட்களாக இது குறித்த எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்களிடம் நீடித்து வந்தது. இதற்கிடையே, அரியானா மாநிலத்தில் மட்டும் கடந்த நவம்பர் 25-ந் தேதி அன்று இத்தகைய வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.
 
இந்த சூழ்நிலையில், நாளை (வியாழக்கிழமை) முதல் இந்தியா முழுவதும் இந்த வசதி அமலுக்கு வருகிறது. இதற்கான அறிவிப்பை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்டு இருக்கிறது.
 

அந்த அறிவிப்பில், `தொலைத்தொடர்பு செல்போன் எண்களை மாற்றாமல் சேவை நிறுவனங்களை மட்டும் மாற்றம் செய்யும் வசதி, நாடு முழுவதும் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு சேவை பகுதிகளிலும் ஜனவரி 20 முதல் அமலுக்கு வருகிறது. இதற்காக, தொலைத்தொடர்பு மொபைல் போன் எண்கள் தொடர்பான ஒழுங்குமுறை விதி 2009-ல் உள்ள பிரிவுகள் மாற்றம் செய்யப்படுகிறது' என கூறப்பட்டுள்ளது.
 
இந்த புதிய மாற்றம் காரணமாக, செல்போன் நிறுவனங்களுக்குள் தரமான சேவையை அளிப்பது குறித்த போட்டியும் மேம்பாடும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், புதிய முறையை தொடர்ந்து பிரிபெய்டு வாடிக்கையாளர்களில் 17 சதவீதம் பேரும் போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்களில் 19 சதவீதம் பேரும் தங்களுடைய செல்போன் சேவை நிறுவனங்களை மாற்றிக் கொள்வார்கள் என தொலைத்தொடர்பு வல்லுனர்கள் கருதுகின்றனர்.

நன்றி: மாலைமலர். www.trai.gov.in 


.

Facebook: விருப்பத்திற்கு ஏற்றபடி வடிவமைக்க

வழக்கமாக நமது Facebook தளத்தின் தோற்றம் கீழே உள்ளது போன்று இருக்கும்.


ஆர்குட் போன்ற தளங்களில் நாம் Theme களை மாற்றுவது போல, Facebook தளத்திலும், நமது விருப்பத்திற்கு ஏற்றபடி மாற்றுவதற்கு userstyles என்ற வலைப்பக்கம் மிகவும் அருமையாக உள்ளது. (தளத்திற்கான சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)

இந்த வலைப்பக்கத்திற்கு சென்று நீங்கள் விரும்பும் theme ஐ தேர்வு செய்து க்ளிக் செய்த பிறகு திறக்கும் பக்கத்தில், வலது மேற்புறம் தோன்றும் பெட்டியில், Install as user script  பொத்தானை க்ளிக் செய்யுங்கள்.


அடுத்து வரும் Confirmation வசனப்பெட்டியில் Install பொத்தானை க்ளிக் செய்து நிறுவிக்கொள்ளலாம்.


இனி புதிய தோற்றத்தில் Facebook இல் விளையாடுங்க..




.

Sunday, 16 January 2011

CAD: வீட்டை கட்டிப்பார்!

தங்களது ரசனைக்கு ஏற்ப ஒரு வீட்டை கட்டவேண்டும் என்பது இன்றைக்கு பெரும்பாலனவர்களின் கனவு. இதற்காக தங்களது சேமிப்பு, வங்கிக்கடன் ஆகியவற்றுடன் தங்களது கனவு இல்லத்தை கட்டுவதற்காக களத்தில் இறங்கும் பொழுது, தங்களது ரசனைக்கு ஏற்ப வீட்டை கட்டி முடிப்பது எனபது மிகப் பெரிய ஒரு போராட்டம்தான். 


கொஞ்சம் வசதி படைத்தவர்கள் தங்களது ரசனைக்கேற்றபடியான கட்டிட வடிவமைப்பை ஒரு ஆர்க்கிடெக்ட் மூலமாக உருவாக்கி, ஒரு தேர்ந்த பொறியாளரின் ஆலோசனையின்படி கட்டிடப்பணியை துவங்குகிறார்கள். AutoCAD இன் உதவி கொண்டு 3டி மாடலையும் உருவாக்கி பார்த்து திருப்தியடைகிறார்கள். 

ஆனால் பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினர் பட்ஜெட் பிரச்சனையினால், ஆர்க்கிடெக்ட், பொறியாளர் இவர்களை தவிர்த்து, ஒரு காண்ட்ராக்டரை கொண்டு, கட்ட முற்படுகிறார்கள். இது போன்ற ஒரு சமயத்தில், தங்களது வீடு எப்படி அமைய வேண்டும் என்பதும், உள் வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதும் அந்த காண்ட்ராக்டருக்கு எப்படி சரியாக புரிய வைப்பது?..  

பெரிய பொறியியல் அனுபவம் ஏதுமின்றி, AutoCAD பயிற்சி தேவையின்றி, தங்களுக்கான வீட்டின் வடிவமைப்பு, Interior ஆகியவற்றை எளிதாக செய்ய, AutoDesk நிறுவனத்தின் ஒரு இலவச ஆன்லைன் சேவைதான் AutoDesk Homestyler. (தளத்திற்கான சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)


இந்த தளத்தில் நுழைந்தவுடன், புதிதாக வடிவமைக்க வேண்டுமா அல்லது ஏற்கனவே உள்ள Design gallery இலிருந்து எடுக்க வேண்டுமா? என்பதை தேர்வு செய்து கொள்ளலாம்.



ஆரம்பத்தில் 2டி திரையில் Floor Plan ஐ உருவாக்கி 3டி வியூவில் பார்க்கலாம். 


தேவையான 3டி மாடல்களை காலரியிலிருந்து ட்ராக் அண்ட் ட்ராப் செய்து, நமது வீட்டை அழகு படுத்தலாம்.


Floor Tiles, Carpet, மற்றும் Wall Colour ஆகியவற்றை நமது விருப்பத்திற்கு ஏற்றபடி மாற்றி, 


நமது கனவு இல்லத்தை வடிவமைத்து அதை மற்றவர்களோடு நமது Google Yahoo போன்ற Open Id ஐ கொண்டு பகிர்ந்து கொள்ளலாம்.



மேலும், இப்படி உருவாக்கிய 3டி மாடலை சேமிக்க விரும்பினால், File மெனுவிற்கு சென்று Export வசதியை பயன்படுத்தி, JPG, AutoCAD drawing / AutoDesk Revit file ஆகிய கோப்பு வடிவிற்கு மாற்றும் வசதியுண்டு.



இப்படி Export செய்யப்படும் கோப்பு உருவாக்கப்பட்டு அதன் லின்க் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.



இந்த கோப்புகளை AutoCAD மூலம் திறந்து கொண்டு, வேண்டிய மாறுதல்களை செய்து, 3D Studio / Maya போன்ற மென்பொருட்களுக்கு ஏற்றுமதி செய்து ஆழகான 3டி மாடல்களை உருவாக்க இயலும்.


ஆக மொத்தத்தில் புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு AutoDesk நிறுவனத்தின் இந்த இலவச சேவை மிகவும் பயனுள்ள ஒன்றாகும்.



.

Saturday, 15 January 2011

மனமார்ந்த நன்றி!

தமிழ்மணம் விருதுகள் 2010 -ல் எனது பல வசதிகளை உள்ளடக்கிய மைக்ரோசாப்ட் Onenote ஒரு பார்வை!    கட்டுரைக்கு 15 வது பிரிவில் முதல் பரிசளித்து மகிழ்வித்திருக்கிறார்கள். 


தமிழ்மணம் குழுவினருக்கு எனது பணிவான நன்றி!

ஆதரவளித்து முதல் பரிசு பெற உறுதுணையாயிருந்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி!

அன்புடன்

சூர்யா கண்ணன்

. 

Friday, 14 January 2011

Google Chrome: இந்திய மொழிகளுக்கான பயனுள்ள நீட்சி!

சமீப காலமாக, தமிழ் உட்பட பல இந்திய மொழி வலைப்பக்கங்கள் யுனிகோட் வடிவமைப்பில் உருவாக்கப் பட்டிருந்தாலும், ஒரு சில வலைப்பக்கங்கள், யுனிகோட் அல்லாத பழைய எழுத்துருக்களை பயன்படுத்தியே உருவாக்கப்படுவதால், நமது உலாவிகளில் அந்த பக்கங்களை வாசிப்பதற்கு, அந்த குறிப்பிட்ட எழுத்துருவை ந்மது கணினியில் நிறுவியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். 


இல்லையெனில் அவற்றை வாசிப்பது சாத்தியமற்று போகிறது. 


இந்த பிரச்சனைக்கு Google Chrome உலாவியில் (நெருப்புநரி உலாவிக்கும்) எளிதான,சரியான இலவச தீர்வாக அமைவது Padma Transformer for Indic Scripts  நீட்சியாகும். (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)


இந்த நீட்சியை தரவிறக்கி Google Chrome உலாவியில் நிறுவியபிறகு, இதற்கான அறிவிப்பு தோன்றுவதை கவனிக்கலாம்.


இனி அந்த வலைப்பக்கங்களை திறக்கையில், எழுத்துருக்களை நிறுவாமலேயே தெளிவாக வாசிக்க இயலும்.


எழுத்துருக்களை தரவிறக்க தேவையில்லை.



அனைவருக்கும் இனிய பொங்கள் நல்வாழ்த்துக்கள்! 


.

Thursday, 13 January 2011

Firefox: இணையத்தில் வேகமாக பணிபுரிய...

நாம் இணையத்தில் உலாவும்பொழுது, வழக்கமாக அட்ரஸ் பாரில் வலைபக்க முகவரியை டைப் செய்யும் பொழுது, www.sitename.com என்பது போன்று, www. மற்றும் .com, .org, .net என முழு முகவரியையும் டைப் செய்வதுண்டு, சிலர் .com இற்கு பதிலாக வலைப்பக்கத்தின் பெயரை மட்டும் டைப் செய்து Ctrl+Enter கொடுப்பதுண்டு. (gmail என டைப் செய்து Ctrl+Enter கொடுக்கும் பொழுது www.gmail.com என Prefix மற்றும் Suffix ஐ அதுவாகவே நிரப்பிக் கொள்ளும்) இது பலரும் அறிந்த ஒன்று.

ஆனால், நாம் அடிக்கடி உலாவும் வலைப்பக்கங்கள், .com மட்டுமின்றி .net, .org, .co.in என பலதும் இருப்பதுண்டு. இவற்றிற்கான ஷார்ட்கட் கீகளை நெருப்புநரி உலாவியில் உருவாக்க ஒரு எளிய நீட்சி URL Suffix. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)
இந்த நீட்சியை தரவிறக்கி உங்கள் நெருப்புநரி உலாவியில் பதிந்து கொண்ட பிறகு, Tools மெனுவிற்கு சென்று, Add-ons ஐ க்ளிக் செய்யுங்கள்.


இப்பொழுது திறக்கும் சிறு திரையில், URL Suffix பகுதியில் உள்ள Options பொத்தானை சொடுக்கவும்.


அடுத்து திறக்கும் வசனப்பெட்டியில், கொடுக்கப்பட்டுள்ள ஷார்ட்கட் கீகளுக்கு தேவையான Prefix மற்றும் Suffix ஐ நம்முடையை வசதிக்கு ஏற்ப கொடுத்து, OK பொத்தானை சொடுக்குங்கள்.


அவ்வளவுதான், இனி இந்த கீகளை நினைவில் வைத்துக் கொண்டு, விரைவாக இணையத்தில் பணிபுரிய இயலும்.


.

Tuesday, 11 January 2011

Antivirus: ரைட்டு சைத்தான் சைக்கிள்ள வருது! - பாகம் - 2

நீண்ட இடைவெளிக்கு மன்னிக்கவும். (தொடர்ந்து எழுதாமல் இருந்தாலும் யாரும் கண்டுகொள்ளப் போவதில்லை என்பது வேறு விஷயம்).

Antivirus: ரைட்டு சைத்தான் சைக்கிள்ள வருது! பாகம் - 1

Regsvr.exe/New Folder.exe பாதிப்பை நீக்க..,

நமது கணினியில் ஒவ்வொரு ட்ரைவிலும், System Volume Information என்ற பெயரில் Hidden Folder இருப்பதை கவனித்திருக்கலாம். நமது கணினியில் அவ்வப்பொழுது ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, System Restore point உருவாக்கப்பட்டும் இந்த கோப்புரைக்குள் சேமிக்கப்படுகிறது. இந்த  கோப்புரையை டெலிட் செய்ய இயலாது. ஒருவேளை வைரஸ்/மால்வேர் தாக்குதலுக்கு பிறகு இந்த System Restore point உருவாக்கப் பட்டிருந்தால் அதிலும் இந்த பாதிப்பு இருக்கும். வைரஸ்களை நீக்கிய பின்னரும் இதிலிருந்து மறுபடியும் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால், முதலில் இந்த கோப்புரைக்குள் உள்ளவற்றை நீக்குவது நல்லது. 
இதனை செயல்படுத்த, My Computer இல் வலது க்ளிக் செய்து  Properties செல்லவும். இங்கு, System Restore டேபிற்கு சென்று, Turn off System Restore on all drives ஐ தேர்வு செய்து கொண்டு, Apply மற்றும் OK கொடுத்து சேமித்துக் கொள்ளுங்கள்.


இப்பொழுது System Restore வசதி அனைத்து ட்ரைவ்களிலும் முடக்கப்பட்டிருக்கும்.

அடுத்து, வைரஸ் பாதிப்பு ஏதுமற்ற ஒரு கணினியை பயன்படுத்தி, http://pcsafety.us என்ற தளத்திலிருந்து, ComboFix.Exe என்ற கருவியை தரவிறக்கி, USB ட்ரைவில் பதிந்து கொண்டு, பாதிக்கப்பட்ட கணினியில் இணைத்து, விண்டோஸை Safe mode இல் திறந்து கொண்டு, இந்த கருவியை இயக்கவும். 
நீல நிறத் திரையில் இந்த கருவி இயங்க துவங்கும்.


அடுத்து திறக்கும் DISCLAIMER OF WARRANTY ON SOFTWARE வசனப் பெட்டியில், OK பட்டனை சொடுக்கவும்.


Registry Backup உருவாக்கப்படும் இந்த சமயத்தில் கணினியில் வேறு எந்த பணியையும் தவிர்க்கவும்.


அடுத்து திறக்கும் வசனப்பெட்டியில் Windows Recovery Console நிறுவவேண்டுமா? எனும் கேள்விக்கு, No  பொத்தானை சொடுக்குங்கள். இனி அதன் பணியை துவங்கும். இந்த செயல்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளும் நேரம், ஒவ்வொரு கணினிக்கு ஏற்றவாறு மாறுபடும்.

ஒவ்வொரு Stage ஆக முடிந்த பிறகு, கணினியை அதுவாகவே ரீஸ்டார்ட் செய்து, திரும்ப திறக்கையில் F8 கீயை அழுத்தி மறுபடியும் Safe mode ஐ தேர்வு செய்து கொள்ளுங்கள். அதிக பட்சமாக 15 நிமிடங்களுக்குள்ளாக இதன் பணி முடிந்துவிடும். 

கணினியை ரீஸ்டார்ட் செய்து, Normal மோடில் திறந்து கொள்ளுங்கள். இப்ப்பொழுது, Regsvr.exe மற்றும் New Folder.exe பாதிப்பு உங்கள் கணினியிலிருந்து நீக்கப்பட்டிருக்கும். நமது அடுத்த பணி, இந்த தாக்குதல்களினால் முடக்கப்பட்ட, Task Manager, Registry Editor ஆகியவற்றை மறுபடியும் சரிசெய்வதுதான்.

இந்த பணியை செயல் படுத்த, Start சென்று, Run இல் Gpedit.msc என டைப் செய்து எண்டர் கொடுங்கள். இப்பொழுது திறக்கும் Group Policy திரையில், User Configuration -> Administrative Templates -> System என்பதை க்ளிக் செய்து கொள்ளுங்கள்.


இப்பொழுது வலதுபுற பேனில், Prevent access to Registry editing tools ஐ இரட்டை க்ளிக் செய்து, திறக்கும் வசனப்பெட்டியில் Disabled என்பதை தேர்வு செய்து OK கொடுங்கள். 


அடுத்து, Task Manager ஐ enable செய்ய, Group Policy -இல் மேலே குறிப்பிட்டுள்ள பகுதிக்குச் சென்று வலது புற பேனில், Ctrl+Alt+Del  Options என்பதை இரட்டை க்ளிக் செய்து, திறக்கும் திரையில்,

Remove Task Manager ஐ திறந்து Disabled ஐ தேர்வு செய்து OK பொத்தானை சொடுக்குங்கள். அவ்வளவுதான். 


ஆனால் ஒரு சில கணினிகளில் இந்த முறையில், Task Manager, மற்றும் Registry editor ஐ சரி செய்ய முடியாமல் போகலாம். இந்த நிலையில் நமக்கு பேருதவியாக இருப்பது, RRT எனும் கருவி. இதனை www.sergiwa.com என்ற தளத்திலிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம். (சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)



மறுபடி சந்திப்போம்..

.