சில தவிர்க்க முடியாத சமயங்களில் உங்கள் நண்பரது கணினியில் நீங்கள் பணிபுரிய வேண்டிய சந்தர்ப்பங்கள் வருவதுண்டு. அவசரமாக மின்னஞ்சல் பார்க்கவோ அல்லது இணையத்தில் வேறு ஏதாவது தகவல்களை பார்க்கவோ வேண்டியிருக்கலாம். நீங்களும் பணி முடித்து அவரது கணினி அல்லது மடிக்கணினியை அவரிடம் ஒப்படைத்து விடுகிறீர்கள்.
மற்றொரு இடுகையில் நான் சொன்னது போல யாரை நம்ப முடியும்? நீங்கள் சென்றபிறகு, நீங்கள் பயன்படுத்திய உலாவியை திறந்து, நீங்கள் சென்ற தளங்களின் விவரங்களை பார்ப்பது, உங்கள் மின்னஞ்சல் கணக்கை திறக்க முயல்வது (தவறுதலாக ஏதேனும் தளத்தில் லாக்அவுட் செய்துவிட மறந்தால் அவ்வளவுதான்.) என ஒரு சில குறுக்கு புத்திகாரர்களிடமிருந்து நீங்கள் எவ்வாறு தப்பலாம்?
கூகிள் க்ரோம் உலாவியில் இதற்கான எளிய வழி ஒன்று உள்ளது. அதுதான் Incognito mode எனும் private browsing. இந்த முறையில் நாம் இணையத்தில் உலாவும் பொழுது, Browser History, Search History மற்றும் கூகீஸ் அந்த கணினியில் சேமிக்கப் படுவதில்லை. எனவே உங்கள் நண்பருக்கு அந்த வாய்ப்பை கொடுக்காமல் தவிர்க்கலாம்.
இதற்குமேல் நண்பர்களது அல்லது பொது கணினிகளில் Google Chrome உலாவியில் பணிபுரியும்பொழுது, Tools பட்டனை க்ளிக் செய்து, மெனுவில் New incognito window. ஐ க்ளிக் செய்து Private Browsing துவங்கலாம்.
அல்லது Ctrl+Shift+N ஷார்ட் கட் கீகளை அழுத்தியும் துவங்கலாம். இவ்வாறு துவங்கும் பொழுது, முதல் முறை கீழே உள்ளது போன்ற செய்தி வரும்.
இந்த வகையில் க்ரோம் பயன்படுத்தும் பொழுது உலாவியில் ஏற்கனவே நிறுவியுள்ள நீட்சிகள் அனைத்தும் முடக்க பட்டிருக்கும். தேவையான நீட்சிகளை நீங்கள் enable செய்து கொள்ளலாம். இப்படி Browsing துவங்கும் பொழுது, ஒரு புதிய ஐகான் இடது மூலையில் வந்திருப்பதை கவனிக்கலாம்.
ஏதாவது வலைப்பக்கத்தில் உள்ள லிங்குகளை மட்டிலும் இந்த மோடில் திறக்க, அந்த லிங்கில் வலது க்ளிக் செய்து Open link in incognito window. என்பதை க்ளிக் செய்தால் போதுமானது.
ஹைலைட்:-
இந்த incognito முறையில் உள்ள முக்கியமான சிறப்பம்சம் என்னவெனில் ஒரே சமயத்தில் இரண்டு வெவ்வேறு ஜிமெயில் கணக்குகளில் நுழைந்து கொண்டு பணியாற்றலாம்.
எனவே ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் கணக்குகளை வைத்திருப்பவர்கள் இதற்காக ஒன்றுக்கு மேற்பட்ட உலாவிகளை கணினியில் நிறுவவேண்டிய அவசியம் இல்லை.
.